Monday, October 31, 2005

மன்னிப்பு, ஓய்வு, நன்றி

காஞ்சிபுரம் பற்றி வலையில் தேடிப்போக , காஞ்சி பிலிம்ஸ் பதிவின் மூலமாய் தமிழ் மணம் தெரிய வந்தது.
இந்த மூன்று மாதத்தில் நிறைய எழுதி ஆகிவிட்டது இந்த இடத்திலும் , அந்த இடத்திலும் பின்னூட்டங்கள் நிறைய விட்டாகிவிட்டது. பலரின் மனதையும் காயப்படுத்தி ஆகிவிடிட்டது. சம்பத்தப்பட்ட ஒவ்வொருவராய் பெயர் சொல்லி மன்னிப்பு கேட்க நேரம் ஆகும்,இடம் பத்தாது என்பதால் பொதுவில் ஒரு மன்னிப்பு.தெரிந்தோ தெரியாமலோ பலரின் மனதை புண்படுத்தி இருக்கிறேன். விளையாட்டு பல நேரங்களில் வினையாகவும் ஆகி விடுகிறது.


தவறு செய்வது மனித இயல்பு , புண்படுத்தாமல் எழுதுவது கடினம்
என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது என்றாலும், இணையத்தில் இந்த மூன்று மாதங்கள் எழுதியது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்பதை நன்றாகவே உணர்த்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக.

நடசத்திர வாரம் முடிந்தவுடன், அலுவலக வேலையாய் தலமை அலுவலகம் இருக்கும் Paris செல்லும் இந்த நல்ல சந்தர்ப்பமும் வாய்த்து இருக்கிறது.அங்கிருந்து அப்படியே இந்தியாவிற்கு செல்லவும் திட்டம். மனைவியுடன் செல்ல இந்த முறை வாய்ப்பு அளித்த மேலாலளருக்கு நன்றி . வேலையும் ஆச்சு, விடுமுறையும் ஆச்சு.கடந்த சில நாட்களாக இங்கேயே அதிக நேரம் செலவழித்து விட்டதால், தனிப்பட்ட, அலுவலக வேலைகள் நிறைய முடிக்கப்படாமல் இருக்கின்றன. அதையும் முடிக்க வேண்டும்.


பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனவருக்கும் நன்றி.

நட்சத்திர வாரத்துக்கு வாய்ப்பு அளித்த மதிக்கு நன்றிகள்


அனைவருக்கும் தீபாவளி, கிரிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

விடுமுறை கழித்து மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

( கொஞ்ச நாள் , பின்னூடங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் மூடி வைத்து இருக்கிறேன். ஏற்கனவே இருக்கும் பின்னூடங்கள் "பத்திரமாகவே" இருக்கின்றன. இதுவரை வந்த பின்னூடங்களுக்கு பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். )

Friday, October 28, 2005

நன்றி

ஒரு வாராமாய் இந்த பதிவுகளை பொறுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

நிறைய எழுதி போரடித்துவிட்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கிரிக்கெட் பைத்தியம்

எனக்கு எப்போ கிரிக்கெட் பைத்தியம் பிடித்தது என்று தெரியவில்லை. ஆனால் முதல் அறிகுறிகள் 87 உலகக்கோப்பையின் போது தெரிய ஆரம்பித்தது . தலைவலி, வயிற்று வலி என்று அத்துணை வலிகளும் பள்ளிக்கு போகாமல் வீட்டில் டிவி பார்க்க உதவின .



பத்தாவது படிக்கும் போது அரையாண்டு தேர்வுகள் அனைத்தயும் கட் அடித்துவிட்டு மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட போட்டியில் ஆடப்போய் அப்பாவிடம் திட்டு வாங்கியவுடன் கொஞ்சம் தெளிந்தது. எல்லாம் 12 வது முடியும் வரைதான் .

அடுத்த கட்டம் கல்லூரியில் ஆரம்பித்தது.
கல்லூரியில் முதல் செமஸ்டர் தேர்வுக்கு முந்திய நாள் நெட் ப்ராக்டிஸ் போய் , ஹெல்மட் போடாமல் பவுன்ஸ்ரை ஹ¥க் பண்ண்ப்போக பெரிய inside edge கண்ணை பதம் பார்த்தது . பத்து தையல்களுடன் கடற் கொள்ளையன் போல ஒற்றை கண் பேண்டேஜ்களால் கட்டப்பட்டு தேரவு எழுதியது எல்லாம் , பைத்தியதிற்கு வேப்பிலை அடித்த மாதிரிதான்.அப்பாவை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்து விட்டு இருந்ததால், வீட்டில் அடி வாங்காமல் தப்பினேன்.



வேலைக்கு சேர்ந்த பின்னும், லாஸ் ஏஞ்லிஸ் வந்த பின்னும் பைத்தியம் தெளியவில்லை .தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் முன்னர் கூட Franklin Rose உடன் ஆட நேர்ந்தது . அவர் போட்ட வேகப்பந்து ஒன்று கூட என் கண்ணுக்கு தெரியவில்லை என்பது வேற விஷயம்.


என்ன முன்னெல்லாம் திட்டு அப்பாவிடம் , இப்ப மனைவியிடம் . மற்றபடி திட்டுகள் மட்டும் குறைவதே இல்லை .


சில வருடங்களுக்கு முன், என் பெரியப்பாவின் மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அவரின் கணவரை கை தொலைபேசியில் வாழ்த்து சொல்ல அழைத்தேன். அவர் பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதால்..

"என்ன மாமா ? இரண்டு விக்கெட்டாமே ?

"ஆமா ஆனந்த். இரண்டு விழுந்தாச்சு, லஞ்ச்க்குள்ள இன்னும் ரெண்டு கூட விழும் என்று நினைக்கிறேன். You know something, the last wicket is a DUCK !"
என்றார் மகிழ்ச்சியுடன்.

அப்புறம்தான் புரிந்தது அவர், இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சை அக்காவின் மருத்துவ அறையில் பார்த்த்து கொண்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார் என்று.

Steve & Mark என்று பெயர் வைத்து விட போகிறார் என்று பயந்துக்கொண்டு இருந்தாள் அக்கா. நல்ல வேளையாக, பாட்டிக்கு அந்த பெயர் எல்லாம் வாயில் நுழையாது என்று அவரை சமாதனப்படுத்திவிட்டார்கள்

மனைவியிடம் கிரிக்கெட்டுக்காய் மாட்டிய நண்பர் , இதை விட மோசம்.
நண்பன் தேனிலவுக்காக இங்கிலாந்து சென்றான் , திரும்பி வந்த அவர்களை அழைத்து வர . Airport க்கு போனேன். மிக சந்தோஷ்மாய் தலைவரும் , சோகமே உருவாய் தலைவியும் வந்தார்கள் .

"என்ன இடம் எல்லாம் பார்த்தீர்கள் ? "

Lords, Oval, headingly, edbagston ...

மனைவியின் சோகம் காரணம் புரிந்தது . அதற்கு தண்டனையாக தலைவர் இப்போது , வாரம் தவறாமல் ஒவ்வொரு mall யையும் தலைவியோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார்.



இங்கு லாஸ் ஏஞ்லஸில் நான் ஆடுவது இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என்று எலலாம் கலந்து செய்த ஒரு World XI அணியில் . அணி தலைவர் ஜமைக்காவை சேர்ந்த்தவர், லாராவின் பரம விசிறி ,

உங்கள் வீட்டு விருந்துக்கு லாரா வருகிறார். வீடு தீப்பற்றிக் கொள்கிறது, மனைவி அல்லது லாராவை யாரேனும் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று அவரிடம் கேட்டார்கள்.

Maann.! Are you kidding ? My Wife is a lousy bat !!

என்று பதில் வந்தது .

உலகமெங்கும் கிரிக்கெட் பைத்தியங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


எனக்கு வரும் என் e-mail எல்லாம் மூன்று folders பிரித்து வைத்து இருக்கிறேன் . முக்கியமானவை In, படித்து , பதில் அனுப்பியவை Out.
பதில் அளிக்க விரும்பாதவை . பிடிக்காதவை எல்லாம் LBW ( Let those buggers wait !) .



================================================================================

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !










Wednesday, October 26, 2005

படம் காட்டும் பதிவுகள்

புதிய பமக ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கக் கூடும்.


படம் போடும் பதிவர்களின் நலன் காக்க ஆரம்பிக்கப்பட்ட கழகம் , பத்து பேர் மட்டுமே இருக்கும் கட்சியை ஏன் உடைப்பது என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கும் , பட பதிவர்களை கிண்டல் செய்த பமக தலைவரே படம் போட ஆரம்பித்த உடன் ( சில பல சூட்கேஸ்கள், பதவி ஒப்பந்தகள் அடிப்படையில் ) தாய் கழகத்துடன் இணைந்ததையும் தமிழ் கூறும் நல்லுகம் அறியும்.

சில படம் போடும் பதிவர்களை இந்த சம்யத்தில் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கடலோடி பரணியின் படங்கள், இவருக்கு மட்டும் எப்படி அழகிய மாலைக்காட்சிகள் அற்புதமாய் கிடைக்கின்றன் என்று என்னை பொறாமை பட வைப்பன. இராமநாதனின் எறும்புகளும், தஞ்சை கோவில் படங்களும் அருமையானவை

தமிழ்மணத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு படம் போடும் பதிவர்கள் மிகச்சிலரே. ( நான் சொல்வது சொந்தமாக படம் எடுத்து போடுவர்கள் பற்றி மட்டுமே ).


என் புகைப்பட பதிவில் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்திய சுதர்சன், மஞ்சுளா ( எங்கே உங்கள் படங்கள் ? ) கார்த்திக், UK சுரேஷ் , தேசிகன் மற்றும் அனைவரும் தான் , நான் ஞாயிறு கிழமை தோறும், கேமராவும் கையுமாய் ஊர் சுற்ற காரணம் .


முன்னரே குறிப்பிட்ட மாதிரி நல்ல புகைப்படம் எது என்று எப்படி வரையறுப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

பார்த்ததில் பிடித்தவற்றை, படம் பிடிக்கிறேன். நன்றாக வந்து இருப்பதாய் எனக்குத் தோன்றுவதை பதிவிடுகிறேன் என்ற நிலைதான் எனக்கு.

எனக்கு தெரிந்த சில எளிய குறிப்புகள்.

  • Digitial camera வாங்குங்கள். (கொஞ்சம் டப்பு இருந்தால் நிச்சயம் DSLR )
  • Depth of Field பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.
  • முடிந்த வரை Tripod உபயோகியுங்கள்.
  • மதிய வேளைகளில் புகைப்படம் எடுப்பதை தவிருங்கள் ( மாலை. விடியற்காலை நல்ல நேரங்கள் )
  • முடிந்த வரை Flash உபயோகப்படுத்தாதீர்கள். இயற்கை வெளிச்சத்தை எப்படி உபயோகப்படுத்திக் கொள்வதை கற்க இது மிகவும் பயன்படும் )
  • மக்களை எடுக்கும் போது , foreground ல் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், அதே சமயம் Landscape எடுக்கும் போது foreground ஏதேனும் இருப்பது படத்தை நன்றாக காட்டும்.
  • Horizon நடுவில் இருப்பது போல் எடுக்க வேண்டாம்.
  • வானம் மூடிய, மேகங்கள் கொஞ்சம் கீழே இறங்கி இருக்கும் நாட்களில் Landscape படங்கள் அருமையாக வரும்.
  • பொறுமை வேண்டும்
  • ஒரே படத்தை பல கோணங்களில் , பல esposure ல் எடுத்து பாருங்கள்.
  • புகைபடம் எடுப்பது பற்றி படித்த எல்லா விதிகளையும் மீற தயாராய் இருங்கள்.

Stop taking photo.. Make photo..,, say cheese !!!

இவற்றை பற்றி கொஞ்சம் விரிவாய் இங்கே.


புகைப்படம்

குறிப்பு 1

குறிப்பு 2

குறிப்பு 3

குறிப்பு 4

குறிப்பு 5




என் சில முயற்சிகள்

பூக்கள்

மரங்கள்

சூரியன்

கடற்கரை

பொது

ஓவியங்கள்







Tuesday, October 25, 2005

மாட்டு டாக்டர்

பள்ளியில் உங்களுக்கு என்ன பட்டப் பெயர் ?


காஞ்சிபுரம் போன்ற ஒரு கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு பேரூரில் வளர்ந்த, படித்த எனக்கு கிடைத்த முதல் பெயர் ஆந்தை . இத்தனைக்கும் நான் கண்ணாடி அணிவதில்லை, என் கண்களும் பெரிதும் இல்லை. எப்படியோ ஆனந்திற்கும் , ஆந்தைக்கும் சம்பந்தம் இருப்பதாக யாரோ வைத்த பெயர் அது.

சரி பரவாயில்லை என்று நான் நினைத்து கொண்டு இருந்த போது தான் வகுப்பு ரவுடி நடராஜ் வீட்டு மாட்டுக்கு பிரசவம் பார்க்க கால்நடை மருத்துவரான என் தந்தை சென்று இருந்தார். எசகுபிசகா சிக்கிக்கொண்ட கன்று குட்டியை மிகவும் கஷ்டப்படுத்தி காப்பாற்றியும் விட்டார்கள்.

மறுநாள் வகுப்பில் நுழைந்தவுடன் நடராஜ் கத்த ஆரம்பித்தான் .

"'இவனோட அப்பா, மாடு பின்னாடி கையை விடறாரு . மாடு! மாடு!! "

நடராஜ் பின்னால் எப்பவும் "எஸ் பாஸ் " என்று சொல்லித்திரியும் சில பசங்களும் சேர்ந்துக்கொள்ள அன்று அழுதுக் கொண்டுதான் வீடு திரும்பினேன்.


"நீங்க ஏன் மாடு பின்னாடி எல்லாம் கையை விடணும். வேற வேலை கிடைக்கலையா உங்களுக்கு"

அழுதுக்கொண்டே கேட்ட என்னை எப்படியோ சமாதனப்படுத்தி தூங்க வைத்து விட்டார்கள்.

பசுநேசன், மாட்டுக்காரன் யார் என்றால் என் பள்ளியில் இராமராஜனை விட என் பெயரைத்தான் பதிலாக சொலுவார்கள். மூன்றாம் வகுப்பில் வைத்த பெயர் அப்படியே தொடர்கிறது . இன்று வரை அமெரிக்காவில் இப்ப இருப்பதால் கொஞ்சம் ஸ்டைலாக Cowboy என்று மாற்றி இருக்கிறார்கள்

(அரசியல்வாதி மாதிரி எனக்கு பெயர் சூட்டிய நடராஜ் இரண்டு மூன்று இம்ப்ரூவ்மண்ட் எல்லாம் எழுதியும் MBBS கிடைக்காததால் BVSc சேர்ந்து என் அப்பாவிடமே intern ஆக வேலை செய்தது வேற விஷயம் ! ).


ஊரில் சர்க்கஸ் வந்து விட்டால் மட்டும் கொஞ்சம் கிண்டல் குறையும் . ஓசி பாஸில் சர்க்கஸ் சிங்கம், புலியோட photo எடுத்துக்கொள்ளவும், சர்க்கஸ் பார்க்கவும்தான். ஒருமுறை கண்ட மாமிசத்தை தின்று ஆறு, ஏழு சிங்கங்கள் இறந்தப்போது, சிங்கங்களை தைரியமாக தொட்டு பார்க்கவும் முடிந்தது.

நல்ல வேளையாக எந்த வாத்தியாரிடமும்
"நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று திட்டு வாங்கியதில்லை .


காஞ்சிபுரத்து மனித டாக்டர்களிடம் நாயோ பூனையோ இருந்தால் அவைகளுக்கு அப்பா இலவசமாகவும், அதற்கு பதிலாக என் குடும்பத்தினருக்கு அவர்கள் இலவசமாகவும் வைத்தியம் பார்த்துக்கொண்டதால் டாக்டருக்காகவும், மருந்துக்காகவும் எந்த செலவும் இருந்தது இல்லை.

என் அப்பா ஒரு Veterinary Doctor என்று , நாய்க்குட்டிகளை, மாதவன், ராகுல் ட்ராவிடுகளை விட அதிகம் நேசிக்கும் , கல்லூரி SPCA பிகர்களிடம் "கடலை" போடவும் முடிந்தது.


அப்பா பணியில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. இன்னமும் இலவசமாக வைத்தியம் பார்த்துக்கொண்டு இருக்கிறார் . வெளியே வரவே மாட்டேன் என்று அழிசாட்டியம் செய்யும் கன்றுக் குட்டிகளை வெளியில் இழுத்து விட்டுக்கொண்டு , வலிக்கும் கைகளுக்கு iodox தேய்த்து கொண்டு ....

போனமுறை விடுமுறைக்கு போனபோது நடுராத்திரியில் காஞ்சி பஸ்நிலையத்தில் ஆட்டோவை இரண்டு மடங்கு வாடகை பேசி தெருவில் நுழைந்தவுடன் வீட்டை அடையாளம் காட்டினேன்.

"மாட்டு டாக்கர் பிள்ளையா நீ "

"போன வாரம் கூட உங்க அப்பாதான் நம்ம வீட்டு மாட்டுக்கு சினை ஊசி போட்டு விட்டு போனாரு. மாமல்லன் நகர் ஆட்டோ மணி வண்டியில் தான் வந்தேன் என்று அப்பா கிட்ட சொல்லி விடுங்க "

என்று ஆட்டோக்காரர் காசு வாங்காமலே சென்று விட்டார்.

"ஏன் ஆட்டோவுக்கு காசு கொடுக்கவில்லை ? "

அப்பா திட்டுக்கொண்டு இருந்தார்.

"அடுத்த தடவை அவனை பார்க்கும் போது காசு கொடுத்து விடுங்கள் "

என்று அம்மா சமாதனப்படுத்தும் வரை.

காலையில் எழுத்தவுடன் நடராஜ்க்கு போன் பண்ணவேண்டும் என்று யோசித்துக்கொண்டே தூங்கிபோனேன் .





Monday, October 24, 2005

அழுகையின் நிறம் !

அந்த புது அப்பார்ட்மெண்டுக்கு நாங்க குடி போனது ஆகஸ்ட் 1, 2001. நாங்க என்றால், நான், ராகுல் , கொண்டைக்காரன் என்று எங்களால் அழைக்கப்படும் சரண்ஜித் சிங் என்ற சர்த்தாரும்.

நாலு வீடுகள் கொண்ட பகுதிகளாய் அலுவலகதிற்கு அருகிலேயே வசதியாகத்த்தான் இருந்தது. ஒரு வீட்டில் மெக்ஸிகன் இளம் தம்பதியரும், நேர் எதிர் வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆங்கிலேயரும் இருந்தார்கள். மற்ற ஒரு வீடு காலியாக இருந்தது.

வீடு ஒன்று இருப்பது வெறும் தூங்குவதற்கு மட்டும்தான், மீதி நேரம் எல்லாம் அலுவலகத்தில் என்று ஓடிக்கொண்டு இருந்த காலம் அது. அண்டை வீட்டுக்காரர்களை பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள இயலவில்லை. எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது செப்டம்பர் 11ம் தேதி வரை.


அதன் பின் அனைவரும் எங்களை ஒரு மாதிரியாய் பார்ப்பது போல தோன்ற ஆரம்பித்தது. சிங்கின் நீண்ட தாடியும், தலைபாகையும் வேறு .. எந்த சராசரி அமெரிக்கனுக்கு சிங்கின் தலைப்பாகைக்கும், ஓஸாமாவின் தலைபாகையும் வித்தியாசம் தெரியும் ?

சிங் வெளிய வரவே கொஞ்சம் பயந்த்துத்தான் போனான். எந்த நேரத்தில் எவன் வந்து அடிக்கப்போறான் என்று .நாலைந்து சிங்குகளை அங்கே இங்கே போட்டுத்தாக்கி விட்டர்கள் என்று வேற செய்திகள் வந்து, வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு இருந்தது.


எப்ப பார்த்தாலும் எதிர் வீட்டு வெள்ளை ஆசாமி எங்களயே நோட்டமிடுவது போல தோன்றியது. குறிப்பாக சிங்கை அவர் பார்த்த பார்வையே சரியில்லை .

அவர் வீட்டின் வெளியே பெரிய அமெரிக்க கொடியை பறக்க விட ஆரம்பித்தார் . அவர் வியட்நாம் போரில் சண்டையிட்டவர் என்றும், இப்ப மனைவியை விட்டு தனித்து வசிக்கிறார் என்றும் தெரியவந்தது. அவரை நேருக்கு நேர் பார்ப்பதை முடிந்த மட்டும் தவிர்த்தோம்.

அப்புறம் கொஞ்ச நாளில் பயம் பதட்டம் எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் எங்களுக்கும் எதிர்வீட்டு ஆளுக்கும் Cold war மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்து. நேரில் சந்திக்க நேர்ந்தால் தலையைக்கூட நிமிர்த்தாமல் ஒரு ஹை , ஹலோ வோடு நகர்ந்தோம். சில சமயங்களில் அவராகவே ஏதேனும் பேச்சை ஆரம்பித்தாலும், சில வார்த்தைகளுடன் முடித்து ஓடிக் கொண்டு இருந்தோம்.

அப்புறம் அவரை அடிக்கடி பார்ப்பதும் குறைந்து போனது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஏதேனும் ஒய்வு இல்லத்திற்கு போக விரும்புகிறார் என்றும் அவர் ஒருமுறை சொன்னதாக ராகுல் சொன்னான்.


அந்த வருட கிரிஸ்துமஸ் விடுமுறைக்கு வழக்கம் போல அலுவலகம் காலியானது. ஊர் சுற்றக் கிளம்பி மூன்று நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினோம்

வீட்டில் "குப்" பென்ற துர்நாற்றம் தாக்கியது.முதலில் அவ்வளவாக உணரமுடியாவிட்டாலும், இரண்டு நாளில் தாங்க முடியாத நெடி. எங்களை தவிர வேற எந்த வீட்டிலும் ஆட்கள் இருப்பதாக தெரியவில்லை.

ஒருவழியாக விடுமுறை முடிந்து அப்பார்ட்மெண்ட அலுவலகமும் திறந்தது.
முதலில் சென்று இந்த நாற்றத்தை பற்றி சொன்னோம். அவர்களும் வந்து . நாற்றதுக்கான காரணமும் கண்டுபிடித்தார்கள்.

உடல் நிலை திடீரென மோசமாகி எதிர் வீட்டுக்காரர் இறந்து போயிருந்தார். யாரும் கவனிக்காமல் இருந்ததால் அவர் இறந்தது யாருக்கும் தெரியவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் !

அப்புறம் போலிஸ் வந்து , ஆம்புலன்ஸ் வந்து, எல்லாம் நடந்து முடிந்தது . நாற்றத்தை தாங்க முடியாமல் எல்லாரும் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இரண்டு நாட்கள் இருந்தோம்.

சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை, தூக்கமும் இல்லை. எதிர் வீட்டுக்கதவை தட்டிப் பார்க்கக் கூடத்தோன்றவில்லையே .. விடுமுறைக்கு அனைவரும் சென்று விட்டார்கள் என்று நாங்கள் எண்ணியது முட்டாள்தனம். மனது அலைகழித்துக் கொண்டு இருந்தது

வீட்டுக்கு திரும்பியப் போது, அவர் வீட்டு வாசலில் கொடி அமைதியா காற்றில் வீசிக்கொண்டு இருத்து.

"பாவம், நல்ல மனிதன் !! "

என்றான் சரண்ஜித்.

அழுகையை கட்டுப்படுத்த கண்களை துடைத்துக்கொள்வதை தவிர வேறு ஏதும் பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு !

Sunday, October 23, 2005

காதல் என்பது...

திருட்டு கல்யாணதிற்கு சாட்சி கையெழுத்து போட்டு இருக்கிறீர்களா ?

எனக்கு அந்த சந்தர்ப்பம் 1995ல் கடுமையான ஒரு வெள்ளிக்கிழமை மதிய வெயிலில் கிடைத்தது .நம் வசதிக்காக காதலர்களின் பெயர்களை சுரேஷ் , ரேஷ்மா என்று வைத்துக்கொள்வோம்.


ரேஷ்மா என்னுடன் எலக்ட்ரானிக்ஸ் லும், சுரேஷ் மெக்கானிகலிலும், அரசு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நேரம். கல்லூரியின் பிரபலமான மாணவன் சுரேஷ். கல்லூரி கிரிக்கெட் அணி கேப்டன், கல்லூரி விழாக்களில் கலக்குபபவன்.

ரேஷ்மா அட்டெண்டெண்ட்ஸ் தவிர வேறு எதற்கும் வகுப்பில் வாய் திறந்தது நான் பார்த்ததில்லை. வகுப்பிலோ, லேப்பிலோ யாராவது அவளைப் பார்த்து சத்தமாய் பேசினாலே அழுது விடும் அளவிற்கு பயப்படுபவள்.

அவர்களுக்குள் எப்படி காதல் வந்தது என்பது கல்லூரியில் பலரை ஆச்சரியப்படுத்திய விஷயம்.

Project வேலையாக கம்ப்யூட்டர் லேப்பில் C யோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்த போது,

" மச்சி, சுரேஷ், ரேஷ்மாவுக்கு register கல்யாணம் , கையெழுத்து போட வர்றியா ?"
என்ற அழைப்பு வந்தது.

பத்து பதினைந்து பேராய் நகரின் மத்தியில் இருந்த அந்த பதிவு அலுவலகத்துக்கு போனோம். கையெழுத்து போட்டு , மாலை மாற்றி கல்யாணம் நடந்தது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் , வழக்கம்போல நான் , காஞ்சிபுரம் வார இறுதிக்காய் போய்விட்டேன்.கிண்டலும் சிரிப்புமாய் மற்றவர்கள், கல்லூரி விடுதிக்கு பஸ் ஏறினார்கள்.

திங்கட்கிழமை கல்லூரிக்கு திரும்பிய போது ஒரு கலவரமே நடந்தது முடிந்து இருந்தது .

ரேஷ்மாவுக்கு அப்பா இல்லாததும், அவளும் , அவளின் இரண்டு தங்கைகளும், அம்மாவோடு, மாமாவின் வீட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு முன்னரே தெரியும்.

கல்லூரி முடிந்தவுடன் , மாமாவோடு அவளுக்கு கல்யாணம் என்பதால் தான் இந்த அவரசர கல்யாணம் என்பதும், ரேஷ்மாவை , அவள் வீட்டார் வந்து அடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டர்கள் என்பதும் அப்போதுதான் தெரிந்தது.

ரிஜிஸ்தர் அலுவலகத்தில் கல்யாணம் ஆகிவிட்டது, இரண்டு பேரும் மேஜர் அப்புறம் என்ன பிரச்சனை ?

அவசரக் கல்யாண்ம் என்பதாலும் ஆர்வக்கோளாறினாலும், பசங்கள், யாரிடமோ இலஞ்சம் கொடுத்து முன்னரே கல்யாணம் பற்றி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதிகளை எல்லாம் மீறி ஏகப்பட்ட குளறுபடியுடன் இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கிறார்கள் .



அவளின் உறவினர்கள் கவனிக்க வேண்டியவர்களை நன்றாக கவனித்து, இந்த கல்யாணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று மாற்ற வைத்து விட்டார்கள். போலிஸ், வந்து சுரேஷையும் இதை நடத்தி வைத்தவர்களையும் நன்றாக எச்சரித்துவிட்டு போயிருந்தார்கள். மேலும் கோர்டுக்கு எல்லாம் போனால் , "ஆஸிட் அடிப்பேன்" என்று மிரட்டி கல்யாணம் செய்து விட்டார்கள்
என்று ரேஷ்மாவை மிரட்டி சொல்வதற்கும் தயாராக இருந்தார்கள்.


ஒரு வாரத்தில் ரேஷ்மாவுக்கும் அவளின் மாவுக்கும் கல்யாணம் என்று செய்தி வந்த்து. ரேஷ்மா அதோடு கல்லூரி வருவதும் நின்றது.

செமஸ்டர் தேர்வை, எப்பவும் அழுத்துக் கொண்டு பித்து பிடித்தவன் போல் இருந்த சுரேசை மிகக் கஷ்டப்பட்டு எழுத வைத்தோம். முதல் நாள் தேர்வின் போது, ரேஷ்மா கர்ப்பமாய் இருக்கிறாள், என்று கேள்விப்பட்ட செய்தியை சுரேஷிடம் சொல்ல எங்களில் யாருக்கும் தைரியமில்லை .


கல்லூரி முடிந்தவுடன், நான் வேலை விஷயமாய் பெங்களூர், லாஸ் ஏஞ்சலிஸ் என்று சுத்திக் கொண்டு இருந்தேன் சுரேஷ் சென்னையில் வேலை தேடிக்கொண்டு இருப்பதும், பின்னர், consultant ஆக New Jersey வந்து விட்டான் என்றும் மற்ற நண்பர்கள் மூலம் தெரிந்தது.

போன வாரம் மாலிபு கோயிலில் சுரேஷை , அவன் மனைவியுடனும், இரண்டு வயது பெண் குழந்தையுடனும் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு.

அவன் மனைவியும், குழந்தையும் என் மனைவியோடு கோயிலை சுற்ற ஆரம்பிக்க, அவனோடு தனியாய் பேசும் சந்தர்ப்பம் கிடைத்து.
San diego ல் கடந்த இரண்டு வருடங்களாய் இருப்பதாய் சொன்னான்.கல்லூரி , வேலை, Green Card , லாஸ் ஏஞ்சலிஸ்ன் வெயில் எல்லாம் பேசினோம், ரேஷமாவை பற்றி தவிர.

கண்டிப்பாய் வீட்டுக்கு வர வேண்டும் என்று மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டு பிரியும் போது.

"ரேஷ¥ குட்டி , அங்கிள் , ஆண்டிக்கு டாட்டா சொல்லு !"

என்றார்கள் சுரேஷின் மனைவி குழந்தையிடம் .


கண்கள் மின்ன சிரித்துக்கொண்டே எங்களை பார்த்து அழகாய் கை அசைத்து அந்த குட்டி தேவதை.

ரேஷ்மாவின் குழந்தைக்கு இப்ப கிட்டத்தட்ட 9 வயது ஆகி இருக்கும்
என்று நினைத்துக் கொண்டே திரும்ப கை அசைத்தேன் நான்.





பின் குறிப்பு:
இதை பற்றி என் வலைப்பூவில் எழுதட்டுமா என்று சுரேஷிடம் இரண்டு நாட்கள் முன்னர் பேசிக் கொண்டு இருந்தேன். முதலில் வேண்டாம் என்றவன், கடைசியில்
"கண்டிப்பாய் எழுது. ஒரு வேளை அவள் இதை படித்தாலும் படிக்கக் கூடும் " என்றான்.

Friday, October 21, 2005

IMDB வயது 15

இணைய உலகில் திரைப்படங்களை பற்றிய செய்திகள் தேட நானும் பலரும் முதலில் செல்லும் வலைத்தளம் IMDB யாகத்தான் இருக்கும். கிட்டதட்ட நான் இதுவரை தேடிய படங்கள், நடிகர், நடிகையர் விபரங்கள் எனக்கு கிடைக்காமல் போனதே இல்லை.

IMDB ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. வாழ்த்துக்கள். அதன் 15 நிறைவை ஒட்டி அதன் பதிப்பாளர்கள் கடந்த 15 வருடத்தில் வந்த தலைசிறந்த 15 படங்களின் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள்.


லகானும், Fiza வும் இந்த பட்டியலில் உள்ளன. வழக்கம்போல தமிழ் படங்களை இதிலும் தேடி ஏமாந்துத்தான் போனேன்.

Wednesday, October 12, 2005

தண்டனை

இந்த தண்டனை முறை சரி வருமா ?


Tuesday, October 04, 2005

குரங்கும் தேவதையும்

அக்டோபர் மாதம் வந்தாலே கொஞ்சம் ஜாலிதான். NFL சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கும், கிட்டதட்ட ஒவ்வொரு அணியும் 160 ஆட்டம் ஆடி கடைசியாய பேஸ்பால் playoffs ஆரம்பிக்கும்.


வழக்கம் போல Dodgers வயிறெரிச்சலை கொட்டிக்கிட்டாலும் , Angels எவ்வளவோ மேல். Evil Empire உடன் இன்று சாயந்திரம் முதல் ஆட்டம் ஆரம்பம்.

சாயந்திரம் Freeways எல்லாம் கூட்டம் இல்லாமல் இருக்க Rally Monkey அருள் புரியட்டும்.


( இப்பவே பாதிக்கும் மேல அலுவலகம் காலியாணது மாதிரி இருக்கு ! )


Go Halos !